தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி தொல். திருமாவளவன் எடுத்துள்ள அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் திருமாவளவன்  போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தனது முடிவு குறித்து அவர் பேசியதாவது, பதவி மீது எனக்கு எப்போதுமே பெரிய பிடிப்பு இருந்ததில்லை. தற்போதைய சூழலில் கட்சியின் வெற்றிக்காகவும், கூட்டணியின் வெற்றிக்காகவும் மாநிலம் தழுவிய அளவில் பரப்புரை செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதற்காகவே இந்தப் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

மேலும், இப்போது நடக்கப்போவது ஒரு வழக்கமான தேர்தல் கிடையாது. இது ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்திற்கான களம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடைசி நேரத்தில் கட்சியின் முக்கியத் தலைவரே தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பது, அவரது கட்சியினரிடையேயும் கூட்டணி கட்சிகளிடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்தத் தொகுதியில் ஜோதிமணி என்பவரை வேட்பாளராக திருமாவளவன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே இருந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.