தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, தனது வேட்பாளர் பட்டியலை = வெளியிட்டுள்ளது.

இதில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் எல். முருகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தப் பட்டியலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ஒரு தொண்டனாக என்டிஏ கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறத் தீவிரப் பிரசாரம்செய்யப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது குறித்து விளக்கம் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், அவருக்கு சீட் மறுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

பாஜக மேலிடம் மூத்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி வேட்பாளர்களை முடிவு செய்துள்ளதாகவும், இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கட்சியில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை என்றும், தகுதியானவர்களுக்குச் சரியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு கட்சியின் ஒற்றுமையையும், தேர்தல் வெற்றிக்கான திட்டங்களையும் அவர் வலியுறுத்தினார்.