தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றிகள். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “திரு. விஜய் அவர்களைத் தொடர்புகொண்டு தவெக-வின் மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தத் தீர்ப்பு புறக்கணிக்க முடியாத இளைஞர்களின் எழுச்சியைக் காட்டுகிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 தலைவர்களின் வாழ்த்துகளுக்குப் பதிலளித்துள்ள விஜய், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். வாழ்த்துகளுக்கு நன்றி மாண்புமிகு பிரதமர் அவர்களே. மக்களின் நலனே எங்களது ஒரே இலக்கு. அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். இந்த முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

அதேபோல், ராகுல் காந்தியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், பொதுச் சேவையிலும் தமிழகத்தின் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் தமது அரசு உறுதியாக இருக்கும் என்றும், இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.