தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்றுள்ளது. தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய், நாளை ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். புதிய அரசு பதவியேற்கும் வரை அவர் காபந்து முதலமைச்சராக நீடிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெக தனது தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் தவிர்த்து அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அதிரடி வாக்குறுதி அளித்திருந்தது.
தற்போது புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறைகளை வகுக்க கால அவகாசம் தேவைப்படும். இதனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் சிறப்புத் தொகுப்பாக ரூ.5,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், புதிய அரசு பதவியேற்றவுடன் ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பழைய திட்டத்தில் இருந்த பொருளாதாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, “அனைவருக்கும்” என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
