தமிழ்நாட்டையே உலுக்கிய இமாலய கிட்னி திருட்டு விவகாரத்தைத் தற்போதைய தவெக அரசு மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நாமக்கல், திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து, பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று சட்டவிரோதமாகக் கிட்னி திருட்டில் ஈடுபட்டதாகப் பயங்கரமான புகார்கள் எழுந்து நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின்பேரில், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையிலான உயர் மட்டக் குழு இந்த விவகாரத்தில் மீண்டும் தங்களது விசாரணையை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. கோப்புகளைத் தூசி தட்டி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதால், இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய பிரபல டாக்டர்கள் மற்றும் பல முக்கிய அரசியல் விஐபிகள் அடுத்தடுத்து கைதாகக் கூடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
