தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில் இது தொடர்பாக தற்போது அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, டிட்வா புயல் சென்னையை தாக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. அதேநேரத்தில் டிட்வா புயல் கடல் பகுதியில் செல்லும் எனவும் சென்னைக்குள் வராது எனவும் கூறிய அவர் புயல் எச்சரிக்கை தொடர்பாக சுமார் 1.24 கோடி பேருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். அதன்பிறகு 28 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றார்கள். மேலும் 10 குழுக்களை விமான மூலமாக பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்க இருக்கிறோம். விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களில் கூடுதல் நடவடிக்கை எடுக்க அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுப்போம். இதுவரை போக்குவரத்து பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் இல்லை. அதே நேரத்தில் 16 கால்நடைகள் மரணமடைந்துள்ள நிலையில் 24 குடிசைகள் சேதமடைந்துள்ளது. எந்த துறை அதிக பாதிப்பு அடைந்துள்ளது என்பதை பொறுத்து அந்த துறை சார்ந்த அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் 6000 மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கிறது என்று கூறினார். மேலும் பொதுமக்கள் இன்று மட்டும் நாளை இரண்டு நாட்களுக்கு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.