கௌதம் தின்னநூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த 31ஆம் தேதி கிங்டம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்கள் போல சித்தரித்து காட்சிகள் உள்ளதாகவும் தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டியிருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டி படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது, கிங்டம் படம் திரையிட இடையூறு செய்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது.

அதே நேரத்தில் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது என நீதிபதி கூறியுள்ளார். மேலும் படம் திரையிடுவதை எந்த வகையிலும் தடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தரப்பில் வழக்கறிஞர் உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.