தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதோடு மட்டும் இல்லாமல், கார் பந்தயத்திலும் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். கடந்த ஆண்டு அவர் தொடங்கிய ‘அஜித் குமார் ரேசிங்’ நிறுவனம் தற்போது உலகளாவிய ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

துபாயில் நடைபெற்ற 24 மணி நேர endurance ரேஸ் மற்றும் இத்தாலியின் Mugello 12H ரேஸில் சிறப்பாகப் பங்கேற்ற இந்த நிறுவனம், போர்ச்சுக்கல், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நரைன் கார்த்திகேயன், அஜித் குமார் ரேசிங் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் அஜித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, “நரேன் போன்ற திறமையான ஒருவர் நம் அணியில் இணைவது பெருமையளிக்கிறது. அவருடன் பந்தயத்தில் பங்கேற்பது என் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

“>

 

இதற்கும் மேலாக, நரைன் கார்த்திகேயனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “நான் அஜித்தை பல ஆண்டுகளாக நன்கு அறிவேன். அவருடன் தொழில்முறை ரேசிங் களத்தில் இணைந்து பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. இது எனக்குப் புதிதாகும் என்றாலும், மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் நான் பங்கேற்க விரும்புகிறேன்” என நரேன் கூறியுள்ளார். இவரது முதல் போட்டியாக, வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித் குமார் ரேசிங் அணிக்காக பங்கேற்க உள்ளார்.

இதற்கிடையே, நரைன் கார்த்திகேயனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு பயோகிராஃபி திரைப்படமும் உருவாக்கப்பட உள்ளது. அவரது கார் பந்தய வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை, பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார்.

இதன் மூலம், நரைனின் சாதனைகள் திரை உலகிலும் பதிவு செய்யப்பட இருக்கின்றன. அதேவேளை, அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.