ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதாவது விருதுநகரைச் சேர்ந்த சோலையப்பன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் பலமாக மோதியது.

இந்த விபத்தில் சோலையப்பனின் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த சோலையப்பன் மற்றும் அவரது மகன் சோலைச்செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சோலையப்பனின் மனைவி விஜயலட்சுமி மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.