மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், உதயநிதி ஸ்டாலினால் திமுகவில் ஒரு வார்டு கவுன்சிலராகவோ அல்லது ஒன்றியச் செயலாளராகவோ கூட ஆகியிருக்க முடியாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை மதுரை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 4,300-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் வெறும் 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளன.

அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அதனால், கமிஷன் பெறுவதற்காகவும், கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடுவதற்காகவும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த டெண்டர்கள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கமிஷன் கைமாற வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

“அடுத்த ஆட்சி எங்களுடையது (தவெக). தற்போது முறைகேடாக விடப்படும் அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்படும். இதில் ஒப்பந்ததாரர்கள் மாட்டிக்கொள்ள வேண்டாம்; விதிகளின்படி செயல்படுங்கள். அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு விலை போகாமல், மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்,” என அவர் எச்சரித்தார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்து அவர் பேசுகையில், “கருணாநிதி குடும்பம் என்ற அடையாளத்தைத் தவிர அவருக்கு வேறெந்த தகுதியும் இல்லை. அவர் அரசியலில் என்றுமே ஒரு ‘கத்துக்குட்டி’ தான். ஒரு துணை முதல்வர் பதவியில் இருப்பவர், நாயுடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிடுவது பொறுப்பற்றத் தனம். அவருக்கு அரசியல் தெரியாது, அதைக் கற்றுக்கொள்ளும் எண்ணமும் அவருக்கு இல்லை.”

மேலும், “முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் போலச் செயல்படுகிறார். உதயநிதி தனது துறைச் செயலாளருடன் முறையான ஆலோசனைக் கூட்டமாவது நடத்தியிருப்பாரா என்பது சந்தேகமே. அண்ணாவையும், கொள்கைகளையும் திமுக மறந்துவிட்டது. அவர்களுக்கு அரசியல் என்பது ஒரு வியாபாரம். ஆனால், எங்கள் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய வந்துள்ளார்,” என்றார்.

மேலும் தவெக-வின் வேட்பாளர் தேர்வு குறித்துப் பேசிய அவர், “வேட்பாளர் விருப்ப மனுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. யாரோடும் தலையீடு இன்றி, எங்கள் தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுத்து தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்,” என்று தெரிவித்தார்.