மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுணம் தானே” எனச் சிரித்துக் கொண்டே கருத்து தெரிவித்திருந்தார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவரது உயிரிழப்பை ‘நல்ல சகுனம்’ என்று கேலி செய்துள்ள நயினார் நாகேந்திரனின் பேச்சு, அடிப்படை மனிதாபிமானம் அற்றது. அதிகார மமதையில் இருப்பவர்களுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
திமுக-வின் ‘திராவிட மாடல்’ அரசுக்கும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணைபோகும் பாஜக-வுக்கும் இடையேயான ‘கள்ளக்கூட்டணி’ இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கமலாலயம் இன்று அறிவாலயத்தின் கொத்தடிமை ஊதுகுழலாக மாறிவிட்டது. மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இத்தகைய மனநிலை அருவருக்கத்தக்கது.
மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஒரு இழப்பை ஏளனம் செய்வது, கோடிக்கணக்கான தவெக தொண்டர்களின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம்.
மேலும் தொடர்ந்து அநாகரீகமான கருத்துகளைத் தெரிவித்து வரும் நயினார் நாகேந்திரன், உடனடியாகத் தனது பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய தலைவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
