தமிழக காவல்துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் காலத்தில் தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய அரசிடமிருந்து மூன்று அதிகாரிகள் அடங்கிய பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) அனுப்பப்பட்டது. இதில் சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், இறுதியில் மகேஷ் குமார் அகர்வால் தமிழக காவல்துறையின் 34-வது டிஜிபியாக நியமிக்கப்பட்டு, இன்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மகேஷ் குமார் அகர்வால், 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஆவார். சட்டப்பிரிவில் பி.ஏ. மற்றும் வழக்கறிஞர் பட்டப்படிப்பு முடித்தவரான இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். சென்னை பூக்கடை துணை ஆணையராக 3 ஆண்டுகள், சென்னை போக்குவரத்து துணை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் மிகுந்த அனுபவம் பெற்றவர்.
குறிப்பாக, சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றியதுடன், ‘நைட் கிரைம் டூ ஜீரோ’ (Night Crime to Zero) என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி குற்றங்களைக் குறைத்த பெருமை இவருக்கு உண்டு. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் ரயில் கொள்ளை வழக்கை வெற்றிகரமாகக் கையாண்ட இவருக்கு, மெச்சத்தகுந்த பணிக்கான முதலமைச்சரின் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
