எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க முதலமைச்சர் விஜய் நேரம் கேட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறிய தகவல் முற்றிலும் தவறானது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முன்னதாக, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில், “முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அனுமதி (நேரம்) கேட்டிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு நேரம் ஒதுக்கவில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவரைச் சந்திப்பது சரியாக இருக்காது என்று பலரும் முதலமைச்சருக்கு அறிவுறுத்தினர்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி காலி செய்துவிட்டார் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக தரப்பில் இருந்து தற்போது பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, இத்தகவலை முற்றிலுமாக மறுத்து விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் விஜய் சந்திக்க நேரம் கேட்டும், அது அளிக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளது முற்றிலும் தவறான செய்தி. முதலமைச்சரோ அல்லது அவரது அலுவலகத்தில் இருந்தோ யாரும் இபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அதிமுக உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போதைய சூழலில் மேலும் சூடேறியுள்ளது
