தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து 107 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. இந்நிலையில், தவெக-வின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து பின்வரும் கட்சிகள் தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளன: காங்கிரஸ்: 5 இடங்கள் சிபிஎம் (CPM): 2 இடங்கள் சிபிஐ (CPI): 2 இடங்கள் விசிக (VCK): 2 இடங்கள்
இதன் மூலம் தவெக-வின் பலம் 118-ஆக உயர்ந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் முறைப்படி தவெக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆதரவு அளித்த கட்சிகளின் கடிதங்களுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்ல உள்ளார். அங்கு ஆளுநரைச் சந்தித்து, தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை முறைப்படி தெரிவித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளார்.
ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவர் நாளைக்கே (மே 10) பதவியேற்பாரா அல்லது வரும் நாட்களில் சுப முகூர்த்த தேதியில் பதவியேற்பு விழா நடைபெறுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையில் நிலவும் இந்த பரபரப்பான அரசியல் சூழலால், ஆளுநர் மாளிகை மற்றும் தவெக தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் உற்சாகமாகக் குவிந்து வருகின்றனர் .மேலும் ஆட்சி அமைக்க ஆதரவு கிடைத்ததால் இன்று மாலை 5 மணி மணிக்கு மீண்டும் ஆளுநரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நான்காவது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
