தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை (ED) அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் (PMLA) தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமலாக்கத்துறை வழக்கு தொடர அடிப்படையாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை ஏற்கனவே நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. முதன்மை வழக்கே இல்லாத நிலையில், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கு சட்டப்படி செல்லுபடியாகாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அமைச்சர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டது. “அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்வதற்கு ஆதாரமாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு இனி நிலைக்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திமுக தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது.
