தமிழக அரசியலில் இனி ‘சாதி, பணம்’ ஆகிய இரண்டும்தான் பிரதானமாக இருக்கும் என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருந்தது விவாதத்தைக் கிளப்பியது. திராவிட அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக சாதியை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, அதைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதாக அவர் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், சாதியைப் பாதுகாப்பவர்களே இப்படிப் பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது போல” இருக்கிறது என்று கடுமையாகச் சாடியுள்ளார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்தான் சாதியை உருவாக்கி, இப்போதும் அதைச் சரி என்று கூறி ஊக்கப்படுத்துவதாகச் சண்முகம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பண்பாடு என்ற பெயரில் சாதியைக் காப்பாற்றுவதற்கு அடிப்படையாக இருப்பவர்களே பாஜாகவினர்தான் என்றும், சாதியப் பாகுபாடுகளையும் தீண்டாமையையும் கடைப்பிடிக்கும் இவர்கள் சாதி அரசியல் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இந்த வார்த்தைப் போர் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.