சத்தீஸ்கர் மாநிலத்தில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் ஐ, அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர். மதுக் கொள்கையில் நடந்ததாகக் கூறப்படும் பணம் துவக்கம் தொடர்பான முறைகேடு வழக்கில் இது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. சோதனை நடந்த நாளே சைதன்யாவின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே பூபேஷ் பாகலின் ராய்ப்பூர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். இதற்கு முன்பாகவே மதுக்கடைகளின் நிதிச் செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து நடக்கும் விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது மகனைக் கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பூபேஷ் பாகல் தனது சமூக வலைதளத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்தார். தனது மகனின் பிறந்த நாளன்று கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, “இந்த பிறந்த நாள் பரிசை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தந்திருக்கிறார்கள்” என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், “ஒரு ஜனநாயக நாட்டில், இவ்வகை நடவடிக்கைகள் குடிமக்களின் உரிமைகளுக்கு எதிரானது” என்றும் கூறியுள்ளார்.

மதுக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு, காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததாக மத்திய அமைப்புகள் கூறினாலும், அதில் உண்மை எதுவும் இல்லை என்று பூபேஷ் பாகல் தரப்பில் மறுப்புக் கூறப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி பாஜகவின் அரசியல் பழிவாங்கல் எனக் கண்டித்து வருகின்றது. இதனால் சத்தீஸ்கர் மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.