உத்தரகண்டைச் சேர்ந்த 25 வயதான கேசவ் சக்சேனா என்ற பக்தர், பாபா ஷ்யாமின் அருளைப் பெறும் நோக்கத்தில், தன்னுடைய இடுப்புக்கு 12 இரும்புச் சங்கிலிகளைக் கட்டிக்கொண்டு 18 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணமாக கடந்து, ராஜஸ்தானின் கதுஷ்யம் ஜி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்த பக்திப் பயணம், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “பாபா ஷ்யாமை மகிழ்விக்கவே இந்த பயணத்தை மேற்கொண்டேன்” என்கிறார் கேசவ்.

திங்கட்கிழமை நைனிடாலில் இருந்து ரயிலில் புறப்பட்ட கேசவ், செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு ரிங்காஸில் உள்ள பழமையான ஷ்யாம் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து, பின்னர் தனது நடைபயணத்தைத் தொடங்கினார். 27 மணி நேர பயணத்திற்குப் பிறகு, புதன்கிழமை மாலை 4 மணியளவில் கதுஷ்யம் ஜி கோவிலை அடைந்தார். இதற்கு முன்பும், கடந்த ஏப்ரல் மாதத்தில் கை, கால்களை சங்கிலியால் கட்டி பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கேசவ் கடந்த 12 ஆண்டுகளாக கதுஷ்யத்திற்கு தொடர்ந்து வருகை தந்து வருகிறார். 9 வயதில் பெற்றோரால் கைவிடப்பட்டு தனியாக வளர்ந்த இவர், பாபா ஷ்யாமின் அருளால் இன்று நைனிடாலில் உள்ள ஒரு குடிநீர் பாட்டில் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். பணம் இல்லாதபோது சைக்கிளில் பயணித்து தரிசனம் செய்த அனுபவத்தை நினைவுகூறும் அவர், இன்று சங்கிலிகளால் கட்டி நடந்து பாபாவை சந்திக்கிறேன் என்பது எனது வாழ்க்கையின் பாக்கியம் என பெருமிதத்துடன் கூறுகிறார்.

இதோடு மட்டுமல்லாமல், “இந்த நாட்டில் அசைவ உணவை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்” என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் கேசவ் கோரிக்கை விடுத்துள்ளார். பாபா ஷ்யாமின் மீது கொண்ட பக்தியும், வாழ்க்கையில் கடந்து வந்த துயரங்களும் அவரது இந்த பயணத்தை மேலும் முக்கியமாக மாற்றியுள்ளது. அவருடைய நம்பிக்கையும் உறுதியும் பலருக்கும் தூண்டுகோலாக திகழ்கிறது.