திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 5) காலை விஜயவாடாவிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் மோதியபின் சாலையில் கவிழ்ந்தது.
இந்த திடீர் விபத்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, கிரேன் எந்திரம் மூலம் பஸ்ஸை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
