சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை கவனத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இந்த விடுமுறையை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை காரணமாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்துக்கும் நாளை (06.08.2025) ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை Negotiable Instrument Act, 1881 என்ற செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராததால், அவசர மற்றும் பாதுகாப்பு சார்ந்த அரசுப் பணிகளைச் செய்யும் கருவூலங்கள், அவசியமான பணியாளர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக, ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) சேலம் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, தற்போது கிடைக்கும் விடுமுறை நாளுக்குப் பதிலாக அந்த நாளில் பணியாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
