இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் முக்கிய நட்சத்திரங்களிலும் ஒருவருமான மோகித் சர்மா, அனைத்து வகை கிரிக்கெட் வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 14 ஆண்டுகள் நீண்ட கிரிக்கெட் பயணத்துக்கு அவர் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த 2011–ஆம் ஆண்டு ரஞ்சி டிரோபியில் ஹரியானா அணிக்காக குஜராத் அணிக்கு எதிராக அறிமுகமான மோகித் சர்மா, துல்லியமான யார்க்கர்கள் மற்றும் மாறுபட்ட ஸ்லோயர் பந்துகளுக்குப் புகழ்பெற்றவர். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் அரங்கில் சிறப்பாகப் விளையாடிய  இவர், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய காலத்தில் பர்ப்பிள் கேப்பையும் கைப்பற்றியுள்ளார். பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.

ஓய்வு குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மோகித் சர்மா, “இன்று, நிறைந்த இதயத்துடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் என் ஓய்வை அறிவிக்கிறேன். ஹரியானாவுக்காக விளையாடியது முதல் இந்திய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது, ஐபிஎலில் பங்கேற்றது வரை — இந்த முழுப் பயணமும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்,”
என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் துணைநின்றவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர்,
“என் தொழில்முறை பயணத்தின் முதுகெலும்பாக இருந்த ஹரியானா கிரிக்கெட் சங்கத்திற்கும், என்னை வழிநடத்திய அனிருத் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பிசிசிஐ, ஐபிஎல் அணிகள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து, “என் கோபங்களையும் மனநிலை மாற்றங்களையும் சகித்துக்கொண்டு, அனைத்திலும் எனக்கு துணையாக இருந்த என் மனைவிக்குச் சிறப்பு நன்றி,” என்று உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 37 வயதான மோகித் சர்மா, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎலில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததாக விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், தனது அனுபவத்தாலும் கட்டுப்பாட்டான பந்துவீச்சாலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். அவரது ஓய்வு அறிவிப்பு, இந்திய கிரிக்கெட் உலகில் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்ததாக பாராட்டப்படுகிறது.