தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் போது இன்று முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த 5 வருஷத்தில் திமுக அரசின் சாதனைகளை விளக்கிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 3500 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றார். இத்திட்டத்தில் ஏற்கனவே இரண்டு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பிறகு ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதேபோன்று தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சமையலர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த ஐந்து வருட ஆட்சியை பார்த்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு திமுக தான் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் எனவும் என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், உறுதியாக சொல்கிறேன் நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கையாக கூறினார்.