தெருநாய்கள் பிரச்சனை குறித்து தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிக்கிறது. தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதியில் (என்சிஆர்) தெருநாய்கள் தொல்லை தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து தனித்தனியாக நான்கு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 22 அன்று, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு — விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா — வழங்கிய உத்தரவில், தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம், தடுப்பூசி ஆகியவை செய்து, பின்னர் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடுவிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டது.

அதே நேரத்தில், தெருநாய் பிரச்சனை தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த வழக்கில் தரப்புகளாக சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாடு உட்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது தெருநாய் பிரச்சனை எவ்வளவு தீவிரமான பிரச்சனை என்று தெரியாதா.? கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டோம் இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் இந்த விவாகரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உட்பட 25 மாநில செயலாளர்கள் வருகிற நவம்பர் மூன்றாம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மேற்குவங்கம், தெலுங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநகராட்சிகள் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.