மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்திருந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் மீது நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு, கஃபேவுக்கு செல்ல வெளியில் வந்திருந்த இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு ஒரு இளைஞர் பாலியல் தொந்தரவு மேற்கொண்டதாக புகார் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர். கை மற்றும் காலில் மாவுக் கட்டுடன் கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை போலீசார் அழைத்து வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறிய கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகுந்த மோகம் இருப்பதால், அவர்கள் பொதுவெளியில் செல்லும் முன் பாதுகாப்பு அதிகாரிகள் அல்லது உள்ளூர் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். சில நேரங்களில் வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள்; அதனால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இடத்தில், பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறியதாக காங்கிரஸ் கட்சி அமைச்சர் மீது கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, “பெண்கள் மெல்லிய ஆடைகள் அணிவதை தனக்கு பிடிக்காது” என்று பேசியதும் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவைச் சுற்றி சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.