தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா மீண்டும் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இன்று காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்ட அவர், 18 சுற்றுகளின் முடிவில் 56,711 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் எஸ்.ராஜகோபால் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரை ஆகியோர் கடும் போட்டியைக் கொடுத்த போதிலும், இசக்கி சுப்பையாவின் வாக்கு வங்கியை அவர்களால் அசைக்க முடியவில்லை. தவெக வேட்பாளர் சுமார் 48,000 வாக்குகள் வரை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த வெற்றி அக்கட்சிக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அம்பாசமுத்திரம் தொகுதி முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
