தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மாநிலமே வியக்கும் வகையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  ஜோசப் விஜய் அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே முன்னிலை வகித்து வந்த விஜய், இறுதிக்கட்ட முடிவுகளின்படி சுமார் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை தோற்கடித்தார். பெரம்பூர் தொகுதியில் நிலவி வந்த கடும் போட்டியில், விஜய் அவர்களின் இந்த வெற்றி ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா, கடும் சவாலை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில், தமிழக வெற்றிக் கழகம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

விஜய் அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து பெரம்பூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். “தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றம் தொடங்கிவிட்டது” என அக்கட்சியினர் உற்சாகமாகத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதே போன்று தற்போது திருச்சி கிழக்கிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். இரு தொகுதிகளிலும் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளதால் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்