தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதன் படி
தேர்வு எழுதியவர்கள்: 8,70,643
தேர்ச்சி பெற்றவர்கள்: 8,21,105
மாணவிகள் தேர்ச்சி வீதம்: 96.47%
மாணவர்கள் தேர்ச்சி வீதம்: 92.15%
ஒட்டுமொத்த தேர்ச்சி வீதம்: 94.31%
தமிழக அளவில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அதன்படி முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்
1 புதுக்கோட்டை 97.57%
2 சிவகங்கை 97.54%
3 தஞ்சாவூர் 97.41%
4 திருச்சி 97.31%
5 கன்னியாகுமரி 97.30%
இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் மிகச்சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 5,171 பள்ளிகள் 100% தேர்ச்சியை எட்டியுள்ளன. இதில் பெருமைக்குரிய விஷயமாக, 1,931 அரசுப் பள்ளிகள் முழுமையான தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன. மொத்தம் 8,233 பள்ளிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. இதில் 3,463 அரசுப் பள்ளிகள் அடங்கும்.
அரசுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.86% ஆகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
