தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள படுபயங்கரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது நேற்று சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஆறுமுகம் (20), சதீஷ் (17) ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த இவர்கள் திரிசூலத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தங்கியிருந்தனர்.
அங்கு புகுந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் ஒருவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டதோடு, உடல் உறுப்புகளும் துண்டாக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் புழக்கம் மற்றும் முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குரோம்பேட்டை போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்லாவரம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில், வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 75 வயது முதியவர், மர்ம நபரால் கல்லை எறிந்து படுகொலை செய்யப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது 70 வயது மனைவியிடம் அந்த நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்னர்.
