தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்த பல்வேறு நலத்திட்டங்கள், ஆளுங்கட்சியான திமுகவின் திட்டங்களை நகலெடுத்தவை என திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வைரலாகி வரும் ஒரு வீடியோவில், திமுக ஆதரவாளர் ஒருவர் விஜய்யை நேரடியாகக் கேள்வி கேட்டுள்ளார். “மகளிர் உரிமைத் தொகையை உதவித் தொகை என்றும், தமிழ்புதல்வன் திட்டத்தை காமராஜர் கல்வித் திட்டம் என்றும், விடியல் பயணத்தை வெற்றிப் பயணம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளீர்கள்.

மகளிர் முன்னேற்றத் திட்டத்தை 5 லட்சம் நிதித் திட்டமாக அறிவித்துள்ளீர்கள். இப்படி திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றினால், நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஸ்டாலின் தான் ஆட்சியில் இருக்கிறார் என்று அர்த்தமா?” என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் அரசியல் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடியுள்ளார். “இலவசத் திட்டங்களைக் கேலி செய்ய மட்டுமே உங்களால் முடியும். ஆனால், திமுக வழங்கும் திட்டங்களை ‘நாங்கள் தரமாட்டோம்’ என்று சொல்லி உங்களால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது. அவர்கள் தருவதை விட ‘கூடுதலாகத் தருவோம்’ என்று சொன்னால் மட்டுமே உங்களால் அரசியல் செய்ய முடிகிறது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“>

 

இந்த விமர்சனம் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. விஜய்யின் திட்டங்கள் தனித்துவமானவையா அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமா என்ற விவாதம் த.வெ.க மற்றும் திமுக தொண்டர்களிடையே சமூக வலைதளங்களில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.