குஜராத் மாநிலம், பரூச் மாவட்டம், சைகா ஜிஐடிசி (Saykha GIDC) பகுதியில் உள்ள ஒரு மருந்துத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கொதிகலன் (Boiler) பயங்கரமாக வெடித்ததில், மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

கொதிகலன் வெடிப்பின் தீவிரம் அதிகமாக இருந்ததால், தொழிற்சாலையின் கட்டிட அமைப்பே இடிந்து விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் கௌரங் மக்வானா தெரிவித்துள்ளார். பெரும்பாலான தொழிலாளர்கள் உடனடியாகத் தப்பித்த நிலையில், இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

தீயை அணைத்த பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 20 தொழிலாளர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்குத் தீயணைப்புப் படையினரும், தடயவியல் குழுவினரும் விரைந்து வந்து முழுமையான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

மீட்புப் படையினர் வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.