ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வான்வரை கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் தற்பொழுது ஈரானில் கருப்பு மழை மற்றும் அமில மழை பெய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகப் பொதுமக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் மற்றும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்கும்படியும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலக அதிகாரிகள் அந்நாட்டுச் சுகாதாரத் துறையினருடன் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். இந்த வாரத்தில் பல இடங்களில் எண்ணெய்யுடன் கூடிய மழை பெய்ததாகத் தங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெயர் தெரிவித்துள்ளார்.

இதற்குச் சான்றாகத் தெஹ்ரானில் உள்ள அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தரையில் படிந்துள்ள கருமை நிறத்திலான திரவத்தைத் தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் காணொளியை அந்த அமைப்பின் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சூழல் மக்களுக்குப் பெரும் சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.