அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் 11வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் கடற்படை முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆபரேஷன் எபிக் பியூரி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தாக்குதலில் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், ஈரானின் ஆயுதக் கிடங்குகள் அனைத்தும் காலியாகிவிட்டதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள ஜனாதிபதி டிரம்ப், தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டபடி வெற்றிப்பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பல முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டிருந்தாலும், இன்னும் சில முக்கிய இடங்கள் தேவைப்படும்போது தாக்குதல் நடத்துவதற்காகத் தயார் நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஈரானின் வான்வழி மற்றும் கடல்வழிப் பாதுகாப்புத் திறன்கள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா, இப்போர் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் சர்வதேச நாடுகள் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன.
