பாஜகவின் அரசியல் வியூகம் குறித்து மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாஜகவின் முக்கிய நோக்கம் தனித்து மெஜாரிட்டி பெறுவது மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிகாரத்திற்கு வருவதும் அதன் பிறகு அந்த கட்சிகளை மெல்ல மெல்ல ஓரங்கட்டுவதுமே அவர்களின் உத்தியாக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அரசியல் தந்திரம் ஏற்கனவே பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிராவிலும் அதே போன்ற நிலைமை அரங்கேறி வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எந்தெந்த மாநிலங்களில் பாஜக பலவீனமாக இருக்கிறதோ அங்கெல்லாம் சிறிய கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சியில் அமர்வதையும் பின்னர் அதே கட்சிகளின் செல்வாக்கைச் சிதைப்பதையும் அவர்கள் வழக்கமாக வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டிப் பேசிய கபில் சிபல் மகாராஷ்டிராவில் பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இறங்குமுகத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் மும்பை மாநகராட்சியில் செல்வாக்குடன் இருந்த சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளின் இடங்கள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில் பாஜகவின் பலம் மட்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

74000 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கை கொண்ட மும்பை மாநகராட்சியில் சிவசேனா போன்ற வலுவான கட்சிகள் தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும் கூட்டணி என்ற பெயரில் இணைந்து கொண்டு பிராந்திய கட்சிகளின் எதிர்காலத்தை பாஜக கேள்விக்குறியாக்கி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.