
பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வினய் சோமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். குடகு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சோமையா முதல்வர் சித்தராமையா , அவருடைய சட்ட ஆலோசர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னண்ணா ஆகியோர் பற்றி வாட்ஸ்அப்பில் சில தவறான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இதனால் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த இவர் கடந்த மார்ச் 4ஆம் தேதி அலுவலகத்திற்கு சென்றார். இதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடிதத்தை கைப்பற்றியதில் எம்எல்ஏ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தனக்கு தொல்லை கொடுப்பதால் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் சோமையாவின் சகோதரர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி எம்எல்ஏ பொன்னண்ணா, ஆலோசகர் தன்னீரா மஹினா மற்றும் எம்எல்ஏ மந்தர்கவுடா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னீரா மகீனாவை மட்டும் கைது செய்துள்ளனர். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.