ஒடிசா மாநிலத்தின் மயூர்பாஜி மாவட்டத்தில் உள்ள கண்டடிலுலா கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் சுகந்தி கர், மாணவ-மாணவியரை தனது காலை தொட்டு வணங்குமாறு வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் தினமும் இறைவணக்கத்திற்குப் பின், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் தனது காலை தொட்டு மரியாதை செய்ய வேண்டும் என்று சுகந்தி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக மாணவர்கள் இதைப் பின்பற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இந்தக் கோரிக்கையை மாணவர்கள் நிராகரித்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியை பிரம்பு கம்பால் அவர்களைத் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பல மாணவ-மாணவியர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், உடனடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியை சுகந்தி, மாணவர்கள் தனது காலை தொட்டு வணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் தாக்கியது உறுதியானது.
இதையடுத்து, சுகந்தி கரை பணியிடை நீக்கம் செய்ய கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆசிரியரின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
