
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியா கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பதற்காக அவதூறுகளை பரப்புகிறார்கள். திமுகவை குறி வைத்து வதந்திகளை பரப்புகிறார்கள். இந்த அவதூறுகளை எல்லாம் கடந்து, விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கக்கூடிய இந்தியா கூட்டணி… திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான… தமிழகத்தை சார்ந்த அணி அங்கம் வகிக்கின்ற இந்தியா கூட்டணி, மாபெரும் வெற்றியை பெரும்.
2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் சனாதன பாசிஸ்டுகள் ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். பெரும்பான்மை இந்து சமூகத்தினரே பாஜகவை விரட்டி அடிப்பார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன். இது அவர்களுடைய தேர்தல் அரசியல். இந்து சமூகத்தினரை ஏய்ப்பதற்கான முயற்சி. சேகர்பாபு அவர்கள் தீவிரமான ஆன்மீக பற்று உள்ளவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர். இன்னும் சொல்ல போனால் இந்துமத பற்றாளர். அவர் இந்துக்களுக்கு எதிரி என்பதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த, பாஜகவினர் முயற்சிக்கிறார்கள்.
சனாதன பாசிசத்தை எதிர்த்து விமர்சிக்க கூடிய அனைவருமே இந்து அடையாளத்தை கொண்டவர்கள் தான். யாரும் கிறிஸ்தவர் இல்லை, முஸ்லிம் இல்லை, பவுத்தர் இல்லை, சீக்கியர் இல்லை, சமணர் இல்லை. இந்து அடையாளத்தை கொண்டவர்களே இதை விமர்சிப்பதற்கு என்ன காரணம் என்பதை ஒரு கணம் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.