புனித பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற தமிழக அரசின் தலைமை ஹாஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, அங்கு நிலவும் போர் பதற்றம் மற்றும் விமான சேவை ரத்து காரணமாகத் தாயகம் திரும்ப முடியாமல் மெக்காவில் சிக்கியுள்ளார்.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாகத் தலைமை ஹாஜியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவரது நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது அவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உறுதி செய்த முதல்வர், தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
மேலும், வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் சார்பில் அவரைப் பத்திரமாக அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், விமானச் சேவைகள் சீரானவுடன் அவர் உடனடியாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவும் இக்கட்டான சூழலில், ஒரு தலைமை ஹாஜியின் பாதுகாப்பிற்காக முதல்வர் நேரடியாகக் களத்தில் இறங்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
