திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் பேசியதாவது, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் மற்றும் அதிகாரிகள் பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் கொடைக்கானல் நகருக்குள் வரும் வழிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளை சோதனை செய்த பிறகு நகருக்குள் அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட குடிநீர், குளிர்பானம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.