திருவண்ணாமலையை சேர்ந்த சற்குணம் என்பவர் போளூர் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் பணம் எடுக்கும் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி வங்கி கணக்கை பார்வையிட்ட போது அருகே அடையாளம் தெரியாத நபர் சற்குணத்தை கவனித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து வங்கி கணக்கை பார்த்துவிட்டு சற்குணம் அங்கிருந்து கிளம்ப முயன்றார். ஆனால் எந்திரத்தில் இருந்து ஏ.டி.எம் கார்டை எடுக்க முடியவில்லை. இதனால் அடையாளம் தெரியாத மர்ம நபர் உங்கள் கார்டு எந்த இடத்தில் சிக்கிக் கொண்டது.

அதனை எடுக்க காவலாளியை அழைத்து வாருங்கள் என தெரிவித்தார். இதனால் சற்குணம் காவலாளியை அழைத்து வர சென்ற நேரத்தில் அந்த நபர் சற்குணத்தின் ஏ.டி.எம் கார்டை எடுத்துக்கொண்டு போலியான ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் சொருகி வைத்தார். இதனை அறியாமல் போலியான ஏ.டி.எம் கார்டை எடுத்துக் கொண்டு சற்குணம் அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 22 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து சற்குணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.