செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரையும் தலை குனிய வைக்கக்கூடிய ஒரு சம்பவமாக இது அமைந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் – கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை சாதியவாதிகளாகவும்,  மதவாதிகளாகவும் மாற்றுகின்ற…  திட்டமிட்டு அந்த நச்சுக் கருத்துக்களை பரப்புகின்ற சாதியவாதம் – மதவாத  அமைப்புகளை கண்காணிக்க வேண்டியதும்,  அவர்களை கட்டுப்படுத்த வேண்டியதும் அரசின் பொறுப்பு.

நீதியரசர் சந்துரு அவர்களின் தலைமையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இது குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு ஆணையம் அமைத்திருக்கிறார். அது  நாங்குநேரி பிரச்சினை மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களின் நிலவுகிற…. இதுபோன்ற பிரச்சனைகள் குறித்தும், பாகுபாடுகள் குறித்தும், விரிவாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு உரிய வழிகாட்டுதலை தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.

அண்ணாமலை  ஊடகத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் தமிழ்நாட்டிலே எடுபடாது. அவர் தன்னைப் பற்றியே  ஊடகம் அல்லது சமூக வலைத்தளங்கள் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு விளம்பர உளவியலுக்கு ஆளாகி இருக்கிறார். அது ஒரு வகையான மேனியா என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் ஆளாகி இருக்கிறார் என்பதை தவிர,  அவருடைய நடை பயணத்தால் வேறு எந்த தாக்கமும் தமிழக அரசியலில் எடுபடாது என தெரிவித்தார்.