கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சுவாமி கோவில் மாசி மகத்தை முன்னிட்டு சாமியார் பேட்டை பகுதிக்கு தீர்த்தவாரி ஒன்று சென்றுள்ளது. இந்த தீர்த்த வாரி சுவாமி மாலையில் திரும்பிய போது டிராக்டரில் பல்வேறு விதமான பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் மணக்குடி அருகே சென்ற போது ஒரு பிரிவினர் திடீரென வண்டியை வழிமறித்து பாடல் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சாமி ஊர்வலம் சென்ற நிலையில் சாமி ஊர்வலத்திற்கு சென்றவர்களை ஒரு கும்பல் தேடிச் சென்று தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் 3 சிறுவர்கள், 2 வாலிபர்கள், ஒரு முதியவர் என 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது ஆம்புலன்ஸை ஒரு கும்பல் வழிமறித்து ஆம்புலன்ஸில் இருந்தவர்களை கடுமையான முறையில் தாக்கியதோடு சாதி பெயரை சொல்லியும் திட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.