மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அரசுப் பழங்குடியினர் விடுதி ஒன்றில் படிக்கும் மாணவிகள், விடுதி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்கும் முன் கட்டாய கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்த நிர்வாகம் வற்புறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சோதனைகளைச் செய்ய மறுத்தால், விடுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகவும் மாணவிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளதுடன், மாணவிகள் இந்தக் கட்டாயப் பரிசோதனையை வெட்கக்கேடானது மற்றும் அவமானப்படுத்தக் கூடியது என்றும் கூறியுள்ளனர்.
விடுமுறையிலிருந்து திரும்பும் மாணவிகளுக்குக் கர்ப்பப் பரிசோதனை கருவி வழங்கப்படுவதாகவும், அதனை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் மூலம் ‘எதிர்மறை’ முடிவைக் கட்டாயம் பெற்றே ஆக வேண்டும் என்றும், அந்தச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நடைமுறை ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப நடைபெறுவதால், பல மாணவிகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அவசியமற்ற பரிசோதனைக்குத் தாங்கள் பலமுறை உட்படுத்தப்பட்டதாகவும், திருமணம் ஆகாத நிலையிலும் தாங்கள் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுவதாகவும், இது மேலும் தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் சில மாணவிகள் கூறியுள்ளனர்.
இந்தப் பழக்கம் தங்களுக்கு சங்கடத்தை அளிப்பது மட்டுமல்லாமல், மன ரீதியான தொல்லைகளை அளிப்பதாகவும் பெரும்பாலான மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற புகார்கள், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்படும் ஆசிரமப் பள்ளிகளிலும் இருந்து வந்துள்ளன. இந்தப் பள்ளிகளில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்படுகிறது.
எனினும், பல விடுதிகளில் இந்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள், சுமார் 150 முதல் 200 ரூபாய் வரை செலவு செய்து இந்தப் பரிசோதனைக் கருவிகளைத் தாங்களே வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் சில பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, செப்டம்பர் 2025-இல் இதேபோன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது, மாநில மகளிர் ஆணையம் தலையிட்டு இத்தகைய நடைமுறைகளைத் தடை செய்ய உத்தரவிட்டது.
ஆனாலும், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையோ, இத்தகைய விதிமுறைகள் எதுவும் இல்லை, அத்தகைய நடைமுறைக்கும் ஒப்புதல் இல்லை என்றும், விடுதிகளில் இத்தகைய சோதனைகளை நடத்தக்கூடாது என்றும் விளக்கமளித்துள்ளது.
