அரியானா மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) தவறான பயன்பாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ராகுல் பாரதி (வயது 19) என்ற இளைஞர் அரியானாவில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் அவரது மொபைல் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு, அதில் உள்ள குடும்ப புகைப்படங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அவரது மூன்று தங்கைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போலியாக உருவாக்கப்பட்டன.
பின்னர், அந்த ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் ராகுலுக்கு அனுப்பி, ‘சாஹில்’ என்ற நபர் ₹20,000 பணம் கேட்டதாகவும், பணம் வழங்காவிட்டால் சமூக ஊடகங்களில் இக்காட்சிகளை வைரலாக்கிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ராகுல் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
