‘டேட்டிங்’ செயலி மூலம் அறிமுகமான இளம்பெண்ணை திருமண வாக்குறுதி அளித்து லாட்ஜுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் கோழிக்கோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோழிக்கோடு மாவட்டம் எரஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணன் (26). இவர் ‘டேட்டிங்’ செயலி மூலமாக மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் அறிமுகமானார்.

பின்னர் இருவரும் அந்த செயலி வழியாக நீண்ட நாட்களாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களுக்கிடையில் நெருக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு அவர்கள் நேரில் சந்தித்தனர்.

அப்போது அனந்தகிருஷ்ணன், அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவரை கோழிக்கோட்டில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து திருமண வாக்குறுதி அளித்து அவர் மீது பாலியல் வன்முறை நடத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

பின்னர், அந்த சம்பவத்திற்குப் பிறகு அனந்தகிருஷ்ணன், இளம்பெண்ணுடன் தொடர்பைத் துண்டித்து, அவருடைய அழைப்புகளுக்கும் பதிலளிக்காமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண், சம்பவம் குறித்த புகாரை போலீசில் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.