கல்லூரி முடிவில் மாணவர்கள் கண்ணீரோடும், நெகிழ்ச்சியோடும் பிரியும் நிகழ்வுகளை நாம் அடிக்கடி காண்போம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டி. கான்பூர் தொழிற் நுட்பக் கல்வி நிலையத்தில், ஆண்டு தோறும் நடைபெறும் வினோத நிகழ்ச்சி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது — அது ஆண்கள் திருமணம்!

இந்த வினோத பாரம்பரியம் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும், ‘சிம்பிளிபை’ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே. பிர்லா, இந்த “திருமண விழா” தொடங்கிய சுவாரஸ்ய பின்னணியை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பேச்சில், “1994 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் நாங்கள் விடுதி அறையில் நண்பர்களுடன் கதைகள் பேசியபோது, திருமணத்தைப் பற்றிய நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர், ‘கல்லூரி முடிவில் ஒரு போலி திருமணத்தை நடத்தினால் எப்படி இருக்கும்?’ என்று யோசனை கூறினார். அதை நிர்மல் சிங் அரோரா என்ற நண்பர் ஏற்பாடு செய்தார்,” என்றார்.

பெண்கள் பங்கேற்க முன்வராததால், மற்றொரு ஆண் மாணவர் பெண் வேடமிட்டு மணமகளாக நடித்ததாகவும், ஒரு போலியான புரோகிதருடன் விழா நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

மணமகன், மணமகளாக நடித்த மாணவர் இருவரும் குதிரையில் ஏறி, பெண்கள் விடுதி தோட்டத்தில்  ஊர்வலமாகச் சென்றனர். இந்த நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இறுதி ஆண்டு மாணவர்கள் இதைத் தொடர்ந்தனர். இதனால், “ஆண்கள் திருமணம்” இன்று ஐ.ஐ.டி. கான்பூரின் பாரம்பரிய பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

மேலும் 2004 ஆம் ஆண்டில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ், “அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ‘ஷாதி’ விழா இன்று மாணவர்களுக்கு நினைவாகிய பிரியாவிடை கொண்டாட்டமாக மாறியுள்ளது,” எனக் கூறியுள்ளார்.