கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி, தலைமை ஏற்றிருக்கின்ற பேராயர் அவர்களும்,  விழா ஒருங்கிணைப்பாளர் அவர்களும் அழகாக சொன்னார்கள்…  கடந்த இரண்டரை ஆண்டு காலமாக விடியா திமுக ஆட்சியில் விடியல் பிறக்கும் என்று எண்ணியிருந்தோம். கடைசி வரை விடியல் பிறக்கவில்லை. நிச்சயமாக அண்ணா திமுக ஆட்சி மலரும். அப்பொழுது இந்த விடியல் விடியல் என்ற சொல்லுக்கு விடை கிடைக்கும் என்ற பொருளினை அழகாக சொன்னார்.

நிச்சயமாக… உறுதியாக  சிறுபான்மை மக்களாகிய கிறிஸ்தவ பெருமக்கள் வைக்கின்ற கோரிக்கை அண்ணா திமுக அரசாங்கம் நிறைவேற்றும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கிறிஸ்துவுக்குள் அன்பான பெருமதிப்பிற்குரிய பேராயர்களும்,  பெருமதிப்பிற்குற பாதிரியார்கள், போதகர்கள், குருமார்கள், அருட்சகோதரிகள், கண்ணியத்திற்குரிய கிறிஸ்தவ தலைவர்கள்,  மேன்மைமிக்க அருட்சகோதரர்கள்,  கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா, நலிந்தோர் நலத்திட்டம் வழங்கும் விழா,  விருதுகள் வழங்கும் விழா எனும் முப்பெரும் விழாவிற்கு இங்கு பெருந்திரளாக கூடிய உங்களை பார்க்கும் பொழுது கோவை மாநகரமே குளிர்கின்ற காட்சியை இப்பொழுது நாங்கள் பார்க்கின்றோம். அன்பை போதிக்கவே இறைமகன் இயேசு கிறிஸ்து,  இந்த உலகத்தில் அவதரித்தார் என்று புனித வேதம் கூறுகிறது. அந்த சிறப்பான டிசம்பர் 25ஆம் நாள் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் பண்டிகை உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து புனித நூலான பைபிளில் கீழ் கண்டவாறு கூறப்படுகின்றது… பயப்படாது இருங்கள்… இதோ எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று கர்த்தர் ஆகிய கிறிஸ்து எனும் இரட்சகர் உங்களுக்கு தாவீது அவர்களின் ஊரிலே பிறந்திருக்கின்றார்… என்று தேவதூதர்கள் மக்களுக்கு அறிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது….

இதன் அர்த்தம்,  கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சி என்பது கிறிஸ்துவிற்கு மட்டுமல்ல…  உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்று கூறப்படுகிறது…  எனவே நம் அனைவருமே கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு உரிமை உள்ளவர்கள் என்று நான் சொல்லவில்லை,  பைபிள் சொல்கிறது என கூறினார்.