கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரோஷினி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசனிடம் ஒவ்வொரு முறையும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஷினி கூறிய போது அவர் ஏதாவது ஒரு காரணம் கூறி மறுத்துள்ளார். இதனால் தன்னை அவர் ஏமாற்றி விடுவார் என்று பயந்த ரோஷினி உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் அழைத்து சுமூகமான தீர்வு காணுமாறு கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பெண்ணின் உறவினர்கள் இருவரையும் அருகில் இருந்த ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று தமிழரசனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால்  கட்டாயப்படுத்தி தமிழரசனுக்கும் ரோஷினிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழரசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று தன் கணவரின் குடும்பத்தாரால் தன் உயிருக்கு ஆபத்து என்று ரோஷினியும் புகார் கொடுத்துள்ளார். மேலும் காதலித்து ஏமாற்றிய இளைஞரை கட்டாயப்படுத்தி இளம் பெண் திருமணம் செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.