உலகப்புகழ் பெற்ற ஓவியக் கலைஞர் மைக்கலேஞ்சலோவின் அபூர்வ ஓவியம் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியப் பணமதிப்பில் சுமார் 225 கோடி ரூபாய் விலைக்கு ஏலம் போன இந்த ஓவியம், மைக்கலேஞ்சலோவின் படைப்புகளிலேயே மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிவப்புச் சுண்ணாம்பால் வரையப்பட்ட இந்தச் சிறிய பாத ஓவியம் வெறும் 5 அங்குலம் மட்டுமே அளவு கொண்டது. குதிகால் தரையிலிருந்து சற்று உயர்ந்து, கீழே நிழலின் வெளிப்புறத்தைக் கொண்டிருப்பது போன்றும், கால்விரல்கள் சுருங்கியிருப்பது போன்றும் மிக நுணுக்கமாக இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்டிஸ் ஏல நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், மைக்கலேஞ்சலோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றான இந்த ஓவியத்தைக் கைப்பற்ற உலகெங்கிலும் இருந்து ஓவிய ஆர்வலர்கள் திரண்டனர். வத்திக்கானில் உள்ள புகழ்பெற்ற சிஸ்டீன் தேவாலயத்தின் மேற்கூரையில் வரையப்பட்ட ஓவியங்களுக்காக மைக்கலேஞ்சலோ தீட்டிய சுமார் 50 முன்னோடி வரைபடங்களில் இதுவும் ஒன்றாகும்.

சுமார் 45 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலப் போட்டியில், நேரில் வந்தவர்கள் மட்டுமின்றி தொலைபேசி மற்றும் இணையம் வாயிலாகவும் பலரும் போட்டியிட்டனர். இறுதியில் ஒரு மர்ம நபர் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து இந்த அரிய வரைபடத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார்.