தென் ஆப்பிரிக்கப் பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மனிதர்கள் சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற மனிதக் குழுக்களுடன் எந்தவிதமான தொடர்புமில்லாமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று ‘நேச்சர்’ ஆய்விதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. லிம்போபோ நதிக்குத் தெற்கே கண்டெடுக்கப்பட்ட 225 முதல் 10,275 ஆண்டுகள் பழமையான 28 மனிதர்களின் மரபணுக்களை ஆய்வு செய்ததில், அவர்களின் மரபியல் பண்புகள் தற்கால மனிதர்களின் மரபணுக்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தப் புவியியல் தனிமைக்கு, சாம்பெஸி நதியைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆரம்ப கால சமூகங்கள் வாழ்வதற்குச் சாதகமாக இல்லாததுடன் தொலைதூரமும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்தத் தனித்துவமான மரபணு அமைப்பை, பண்டைய தென் ஆப்பிரிக்க மூதாதையர் கூறு என்று ஆய்வுக் குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்தக் குழுவினரே உலகளாவிய மனித மரபணு வேறுபாடுகளில் பாதியைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வாளர் மத்தியாஸ் ஜேக்கப்ஸன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தனிமைப்படுத்தப்பட்ட மரபணு அமைப்பு, மனித பரிணாமத்தின் மர்மங்களைத் திறக்கும் திறவுகோலாக அமைந்துள்ளது. புள்ளிவிவர மாதிரிகளின்படி, சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தென் ஆப்பிரிக்க சமூகத்தின் மக்கள் தொகை பெரிதாக இருந்துள்ளது. இவர்களின் மரபணு அம்சங்களை ஆராய்ந்தபோது, சிறுநீரகச் செயல்பாடு மற்றும் மூளை நரம்பணு வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய தனித்துவமான மரபியல் மாறுபாடுகள் கண்டறியப்பட்டன.

சிறுநீரகத் தொடர்பான பண்புகள் தண்ணீர் மேலாண்மைக்கு உதவியிருக்கலாம் என்றும், நரம்பணு மாறுபாடுகள் கவனத் திறன் மற்றும் மனத்திறன்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மாறுபாடுகள், நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன்ஸ் போன்ற பண்டைய மனிதக் குழுக்களிடமிருந்து ஹோமோ சேபியன்ஸ் எவ்வாறு வேறுபட்டு வளர்ச்சி அடைந்தனர் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்றும் ஆய்வுக் குழுவினர் நம்புகிறார்கள். பலவிதமான மரபணு மாறுபாடுகளின் சேர்க்கை மூலமாகவே மரபியல்ரீதியாக நவீன மனிதர்கள் உருவானார்கள் என்ற பரிணாம மாதிரியைஇந்த கண்டுபிடிப்புகள் வலுப்படுத்துகின்றன.