தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை ஒட்டிய ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்த சஹாஜா உடுமலா (24), அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
வெஸ்ட் அவன்யூ பகுதியில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், போராடி மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில் சஹாஜாவுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சஹாஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சக மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சஹாஜாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சி எடுத்துள்ளது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
